'நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021' கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
ஜூலை 01, 2021இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை நேற்றையதினம் (ஜூன் 30) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்த கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை ஜூன் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு கரையோர கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றது,
இந்தக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் இலங்கை கடற்படை பிரதம அதிகாரியும் கடற்படையின் கிழக்கு பிராந்தியத் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை.என் ஜெயரத்னவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
நிறைவுநாள் வைபவத்தில் உரையாற்றிய இலங்கை கடற்படை பிரதம அதிகாரி, இந்த கூட்டுப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த கூட்டுப் பயிற்சி கடற்படைகளுக்கிடையிலான கடல்சார் தொடர்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்காளி நாடுகளிடையே வலுவான கடல் கூட்டாண்மை ஆகியவற்றை பலப்படுத்த வழிவகுக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த கடற்படை கூட்டுப் பயிற்சி, கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.