சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 442 பேர் கடற்படையினரால் கைது
ஜூலை 03, 2021அண்மையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 152 மீன்பிடி படகுகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் 442 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையகங்கள் ஏப்ரல் 01 முதல் ஜூன் 30 வரை விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் செல்லுபடியாகும் பாஸ் இல்லாமல் மீன்பிடித்தல், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல், இரவு நேர சுழியோடல் நடவடிக்கை , ஒளியினை பயன்படுத்தி மீன்பிடித்தல், கடல் அட்டை பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
சந்தேகநபர்கள் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், தலைமன்னர், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கேகாலை மற்றும் மாதறை இடங்களில் வசிக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் கல்முனை, பொத்துவில், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கற்பிட்டி, தலைமன்னார், கிளிநொச்சி, மன்னார், குச்சவெளி, நிலாவெளி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் புத்தளத்தில் உள்ள கடற்தொழில் பரிசோதகர்களிடமும் அடம்பன் மற்றும் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.