பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

ஜூலை 05, 2021

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் முஹம்மட் ஆரிபுல் இஸ்லாம், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஜூலை, 05) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கு முதற்தடவையாகவருகை தந்த புதிய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர், இராணுவ இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பாக எடுத்துரைத்தார்.

மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் அண்மையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான பங்களாதேஷின் தற்போதைய தலைமையை ஜெனரல் குணரத்ன பாராட்டினார்.

புதிய பாதுகாப்பு வளாகத்தின் கட்டிடக்கலைகளினால் ஈர்க்கப்பட்ட பங்ளாதேஷ் உயர்ஸ்தானிகள் இந்த அமைப்பை இந்த பிராந்தியத்தில் உள்ள அடையாளச் சின்னங்களில் ஒன்றாக கருத முடியும் கூறினார்.

இந்த இரு தரப்பு கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின்பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பு கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.