வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை தயார் நிலையில்

ஜூலை 11, 2021

நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மழை நிலைமைகளை கருத்தில் கொண்டு, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கடற்படை நேற்று எட்டு நிவாரண குழுக்களை தயார்நிலையில் நிறுத்தியுள்ளது.

இதற்கமைய, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்க களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் இந்த நிவாரண குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் பராகொட பிரதேசத்தில் ஒரு வெள்ள நிவாரண குழுவும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி புதிய நகரம், தெல்கொட, குகுலேகம மற்றும் அயகம ஆகிய பகுதிகளில் ஐந்து வெள்ள நிவாரண குழுக்களும் மேற்கு கடற்படை கட்டளையகத்தினால் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,

அத்துடன் ஹினிதும மற்றும் எப்பால ஆகிய பிரதேசங்களில் மேலும் இரு வெள்ள நிவாரண குழுக்கள் தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது தவிர, மேற்கு கடற்படை கட்டளையகத்தினால் 25 கடற்படை வெள்ள நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் 12 அணிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.