103 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூலை 12, 2021

யாழ் அனலைதீவு கடற்கரைப் பகுதியில்  344.55 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் இன்று (ஜூலை, 12) கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 11 சாக்கு பொதிகளில் பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லத் தயாரான நிலையில் படகு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவே  இவ்வாறு  கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களினால்  நாட்டிற்குகுள்  கடத்தி வரும் நோக்கில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவினை படகில் மறைத்து வைத்திருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினை  சந்தைப் பெறுமதி சுமார் 103 மில்லியன் ரூபா என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மன்னார், நாச்சிக்குடா மற்றும் யாழ், குருநகர் பகுதிகளில் வசிக்கும் 34 தொடக்கம் 38 வயது உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.