அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

மார்ச் 18, 2019

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் நேற்று (மார்ச்,17) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய கப்பல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இவ்விரு அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்களும் வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இவ்விரு கப்பல்களுக்கும் இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

இவ்விரு கப்பல்களின் சிப்பாய்கள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளதுடன், குறித்த இக்கப்பல்கள் இம்மாதம் (மார்ச்) 20ஆம் திகதி நாட்டை விட்டு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.