இராணுவத்தினரால் கிளிநொச்சியில் மேலும் இரு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு

ஜூலை 14, 2021

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரண்டு தேவையுடைய குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி சிவிக் சென்டர் பிரதேசத்தில் வசிக்கும் திரு. ராசய்யா ராஜேஷ்வரம், கோனாவில் மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் நகுலேசப்பிள்ளை குகணேஷ்வரி ஆகிய இரண்டு பயனாளிகளுக்கும் வீட்டுடன் அத்தியாவசிய மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான ஆளனி, வளங்கள் மற்றும் நிதி என்பன கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் வழங்கப்பட்டது.

நல்லிணக்கம், மற்றும் நல்லெண்ணம் கட்டியெழுப்பும் வகையில் 9வது சிங்க ரெஜிமென்ட், 7வது இலங்கை இலேசாயுத படையணி மற்றும் 7வது சிங்க ரெஜிமென்ட் படையணிகளின் படைவீரர்கள் இந்த சமூகநலத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற புதுமனை குடிபுகும் விழாவில் கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ராசிங்க, படைவீரர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.