கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா உற்சவம்

மார்ச் 17, 2019

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா உற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமையன்று (மார்ச், 16) வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ்வருடாந்த மத நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்காக யாழ். மறை மாவட்ட ஆயர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இலங்கை கடற்படையினர் வழங்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்புனித அந்தோனியார் ஆலயத்தில் இவ்வருடமும் மூன்றாவது முறையாக திருவிழா உற்சவம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயமானது பாக்குநீரிணையின் இருபகுதியிலும் உள்ள கத்தோலிக்க பகதர்களின் முக்கிய தளமாக காணபடுகின்றது.

இதேவேளை, இவ்வருட திருவிழாவில் இலங்கையிலிருந்து சுமார் 6,500 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2100 பக்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்புனித திருவிழா நிகழ்வில், யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி. ஜஸ்டின் ஞானபிரகாசம், யாழ்ப்பாண இந்திய கவுன்சிலர் ஜெனரல் திரு. எஸ். பாலச்சந்திரன், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின், வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு திருவிழா உற்சவ நடவடிக்கைகளுக்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் மாவட்ட செயலாளரின் ஒத்துழைப்புடன் கடந்தமாதம் (பெப்ரவரி ) ஆரம்பித்தனர். இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள், பாதைகள் மற்றும் மின்சார வசதிகள் என்பவற்றை கடற்படையினர் வழங்கியுள்ளனர். அத்துடன் பக்தர்களின் பாதுகாப்புக்காக கடற்படை உயிர்காப்பு குழு உட்பட மருத்துவ குழு ஒன்றும் கடமை நடவடிக்கைகளிள் ஈடுபடுகின்றனர்.

மேலும், கங்கசந்துரை மற்றும் குரிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து கச்சத்தீவு வரை மத பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பக்தர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு தேவையான குடிநீர் உட்பட போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.