எப்பவாலாவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் நிறுவப்பட்டது

ஜூலை 19, 2021

எப்பவாலாவில் அமைந்துள்ள பண்டைய ஸ்ரீ சம்புத்த வீரசிங்கராமயவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால்ஜூலை 17 அன்று நிறுவப்பட்டது.

வட மத்திய மாகாண சங்கநாயக்க தேரர்களின் பிரதி தலைவர் வண. பன்வில குணரதன நாயக தேரரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்ன வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

ஸ்ரீ சம்புத வீரசிங்கராமயவில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் சுத்தமான குடி நீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் உள்ளுர்வாசிகள் ஆகியோர் நன்மையடையவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சமூக நலன் சார்ந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்பட இந்த உன்னத திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீருக்கான நீண்டகால தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

கடற்படை சமூக பொறுப்பு திட்டங்களுக்காக சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் கெப்டன் டபிள்யூ.எல்.என் குணசேகர கருத்துப்படி இது கடற்படையின் 858வது நீர் சுத்திகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வட மத்திய கடற்படை பிராந்தியத்தின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் சஞ்ஜீவ டயஸ், சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், கடற்படை சமூக பொறுப்பு திட்டங்களுக்காக சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர், செயற்றிட்ட அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.