வெற்றிலைக்கேணியில் 107 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஜூலை 23, 2021வெற்றிலைக்கேணி, கடைக்காடு கரையோரப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 107.840 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையின் வடக்கு கட்டளையகத்தினால் கடைகாடு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, கேரள கஞ்சாவின் 16 சாக்கு பொதிகளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற ஒரு சந்தேக நபரை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது,
இதையடுத்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 24 பொதி கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 32 மில்லியனுக்கும் அதிகமாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியன் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் எனவும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர் மருதங்கேணி பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அடைக்கப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.