யாழ்ப்பாணத்தில் 417 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஜூலை 29, 2021யாழ்ப்பாணம் மடகலிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 417.2 கிலோகிராம் கேரளா கஞ்சா, கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையில், கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள அதிவேக தாக்குதல் படகுகளான P483, ப்ளோட்டில்லா ரக தாக்குதல் படகு மற்றும் ஆழ்கடல் ரோந்து படகுகளான P177 மற்றும் P178 என்பன பயன்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில், ஒரு படகு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து, கஞ்சா பொதி செய்யப்பட்டிருந்த ஒரு சில சாக்குகளை தண்ணீரில் இறக்கிவிட்டிருந்தது. இலங்கை கடற்படைக் கப்பலான ‘அக்போ’ மடகல் கடல் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது சந்தேகத்திற்கிடமான படகில் இருந்து தூக்கி எறியப்பட்ட 08 பொலிதீன் சாக்குகளை மீட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 125 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொண்டமானாறு மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த 20 தொடக்கம் 40 வயதுகளை உடையவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் இளவாலை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் பரவலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.