சந்தஹிருசேய தூபியின் ‘சூடாமாணிக்கம்’ பதிப்பு மற்றும் ‘மினாரா' நிர்மான பணிகள் ஆரம்பம்

ஜூலை 30, 2021
  • தூபியின் ‘சூடாமாணிக்கம்’ பதிப்பு மற்றும் ‘மினாரா' நிர்மான பணிகள் ஆகஸ்ட் 08 முதல்
  • நாடளாவிய ரீதியில் 48 விஹாரைகளில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு ஏற்பாடு
  • மினாரா' நிர்மான பணிகள் நவம்பர் 18ல் திரைநீக்கம்
  • நவம்பர் மாதத்தில் பக்தர்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது
  • சுகாதார வழிமுறைகள பின்பற்றப்பற்றியே பதித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

சந்தஹிருசேய தூபியில் பதிக்கப்படவுள்ள சூடா மாணிக்கம் மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள மினாரா கோபுரம் என்பவற்றை பொதுமக்கள் வழிபடும் வகையில் நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

கொழும்பு, கங்காராமை விஹாரையில் ஆரம்பமாகும் இந்த சமய ஊர்வலம் 18 மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 47 நாட்கள் நாடு முழுவதும் வாகன பவனியாக கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற 48 விஹாரைகளில் வணக்க, வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தந்த பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சுகாதார நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேவையற்ற சன நெருக்கம் தவிர்க்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (ஜூலை, 30) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர் :- சந்தஹிருசேயவின் பிரமாண்ட நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்றதும் இந்த தூபியின் உயரம் ருவன்வெளி சேயவுக்கு அடுத்தபடியாக காணப்படும் என தெரிவித்தார்.

நிர்மாணப் பணிகளின் பூரணத்துவத்தை குறிக்கும் வகையில் இந்தத் தூபி எதிர்வரும் நவம்பர் மாதம் பக்தர்களின் வணக்க, வழிபாட்டுக்காக திறக்கப்படும் எனவும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி மினாரா கோபுரத்தின் திரை நீக்கம் செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள வீதிகளில் வலம் வரவுள்ள இந்த வாகன பவனி தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ளது என்றும் ஒவ்வொரு இடத்திலும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் எனவும் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, “வழக்கமான போக்குவரத்துக்கு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் வாகன பவனி இடம் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்”

இதன்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன ”என்றும் அவர் மேலும் கூறினார்.

சந்தஹிரு சேய நிர்மாண பணிகளின் ஆரம்ப நடவடிக்கை குறித்து நினைவுகூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், இது 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக போராடிய பாதுகாப்பு படையினரின் உன்னத சேவைகளை கெளரவிக்கும் வகையில் முப்படை வீரர்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்பிட்டார்.

 "சந்திரனும் சூரியனும் உதிக்கும் வரை, இந்த மாபெரும் சமய ஸ்தளம் வழிபாட்டு இடமாகவும், உயிர் தியாகம் செய்த மற்றும் காயமடைந்த படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவும் இருக்கும்" என்று கூறினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள புதிய பாதுகாப்பு அமைச்சில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படை தளபதிகளின் பங்கேற்புடன் முதலாவது செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.

இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்ஜன் லமாஹேவகே,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.