கடற்படையினரால் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 02, 2021

மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி அதிகாரிகளிடம் நேற்று (ஆகஸ்ட், 01) கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, மண்டைதீவுக்கு விஜயம் செய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் குறித்த பாடசாலையில் கடற்படையினரால் மேம்படுத்தப்பட்ட கட்டிடங்கள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அத்தேடு, கடற்படையினரால் பாடசாலையின் கணனி ஆய்வுக்கூடத்திற்கு கணினி மேசை கதிரை உட்பட 10 கணனிகளும் மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேலும், கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மாணவர்களின் ஆராதனைக் கூட்டத்திற்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த புதிய இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் என்பன கடற்படையின் நிதி மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு கடற்படை கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தை முன்னிலைப்படுத்தி, குறைந்த வசதி கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த இந்த முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில், வசதிகளற்ற எட்டு பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கடற்படை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிகழ்வு கொவிட்-19 வழிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்டது என கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ் பேராயரும் மண்டைதீவு தீவில் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாருமான கலாநிதி. ஜஸ்டின் ஞானபிரகாசம், வடக்கு கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத்தளபதி, மாகாண கல்வி, இளைஞர்கள், விளையாட்டு பிரிவின் செயலாளர், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.