இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஆகஸ்ட் 04, 2021

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இராணுவத் தலைமையகத்துக்கு தனது கன்னி விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதியினை, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த கன்னி விஜயத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.

இராணுவ தலைமையகத்திற்கான ஜனாதிபதியின் விஜயத்தின் மற்றுமொரு அங்கமாக 2021-2026 வரையான காலப் பகுதியில் எயார் மொபைல் பிரிகேடின் சிறந்த பலன்களை பெறுவதற்கான மூலோபாய அணுகுமுறைகள் பற்றி குறிப்பிடும் “எயார் மொபைல் பிரிகேடின் வியக்கத்தக்க எதிர்காலம் 2021-2026 ” என்ற நூலின் இனைய பதிப்பு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அதன் முதற்பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள "செயற்பாட்டு அறை" யினையும் ஜனாதிபதி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மேலும் இந்த விஜயத்தின் போது இராணுவ அருங்காட்சியகம் உட்பட இராணுவ தலைமையக வளாகத்தில் உள்ள பல பிரிவுகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

வருகை தந்த பிரமுகர்களுடன் குழு புகைப்படம் எடுக்கப்பட்டதுடன் இந்த வருகையினை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பிபி ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.