பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் பொதுமக்கள் வழிபாட்டிற்காக
ஆகஸ்ட் 08, 2021சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ரஜமஹா விஹாரையை வந்தடைந்தது.
பெல்லன்வில ரஜமஹா விஹாரையை வந்தடைந்த இந்த புனித வஸ்துக்களை பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. கலாநிதி பெல்லன்வில தம்மரத்ன தேரர் வரவேற்று சமய அனுஷ்டானங்களை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோர் புனித பொருட்களுக்கு மரியாதை மற்றும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை தாங்கிய வாகன பவனியின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த புனித சின்னங்கள் நாளைய தினம் (ஓகஸ்ட், 09) பொதுமக்களின் வழிபாட்டுக்காக பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் வைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், விஹாரையின் தாயக்க சபையினர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.