பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை ஆரம்பம்
ஆகஸ்ட் 10, 2021- மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க ஒன்லைன் முறைமை அறிமுகம்
- முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்
- காணி அனுமதி மற்றும் உறுதி பத்திரங்களுக்கும் வெகு விரைவில் ஒன்லைன் முறைமை
- எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இதேவேளை, காணி அனுமதி மற்றும் உறுதி பத்திரங்களும் வெகு விரைவில் ஒன்லைன் முறைமை மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "மக்கள் மயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அரச முறைமை" எனும் திட்டத்தினை நனவாக்கும் வகையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை வழங்குவதற்கான ஒன்லைன் சேவை தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு, பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்த்தில் இன்று (ஆகஸ்ட்,10) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர்:-
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயக திணைக்களத்தின் பரிய முன்னெடுப்பான ஒன்லைன் மூலம் சேவை வழங்கும் இந்தத் திட்டம் 2021 ஓகஸ்ட் 02ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த பதிவாளர் நாயகம் மத்துமபண்டார வீரசேகர, 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் சேமிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் எந்த பிரதேசத்தில் இருந்தும் இந்த சேவையினை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபோல மற்றும் உதவி பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) தாரகா பிரசாந்த ஆகியோர் விளக்கமளிக்கையில், ஸ்மார்ட் போன் / கனணியைப் பயன்படுத்தி வீசா அல்லது மாஸ்டர் கார்டு மூலம் கட்டணம் செலுத்தி இந்த புதிய ஒன்லைன் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்றனர்.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஒருமையப்படுத்தப்பட்ட முறைமையில் 1960ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையான் சுமார் 36 மில்லியன் கோணங்களை ஸ்கேன் செய்யப்பட்ட தரவுகளாக வைத்துள்ளது. இதன் மூலம் இலங்கை பிரஜைகள் தங்களது பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழை நாட்டின் எந்த ஒரு பிரதேசத்தில் இருந்தும் இலகுவாக பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட முறையில் விண்ணப்பிக்கப்பட சான்றிதழ்களை, விரைவுத் தபால் மூலமோ அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்தின் மூலமோ பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் வசதியளிப்பதாக மேலும் தெரிவித்தார்.
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய இணைப்பைப் பயன்படுத்தி, விரைவான மற்றும் வினைத்திரனான சேவை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒன்லைன் சேவை தொடர்பான மேலதிக தகவல்களை பதிவாளர் நாயக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இனையத்தளமான www.rgd.gov.lk பிரவேசித்தோ அல்லது 011 288 9518 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.