நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 11, 2021

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எட்வேர்ட் அப்பள்டொன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஓகஸ்ட், 11) சந்தித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலுள்ள தீவு நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளினதும் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் எடுத்துரைத்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்குமிடையே நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அத்துடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த இராணுவத்தினரால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பையும் உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டினார்.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.