இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு

ஆகஸ்ட் 12, 2021
  • அவசர அழைப்பு இலக்கம்  1906 / 0112860002

தேசிய தடுப்பூசி ஏற்றல் திட்டத்தின் மேலும் ஒரு படியாக  இலங்கை இராணுவத்தினரால் மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை இன்று (12) ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இம்மாகாணத்தில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமான வர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதற்காக நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பத்து வாகனங்கள் மற்றும் ஒரு அம்பியுலன்ஸ் என்பன பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தடுப்பூசியை கோரியவர்களை  சந்தித்து  கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவார்கள் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சேவையை எதிர்பார்ப்பவர்கள், கொவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் ஹொட்லைன் இலக்கம் 1906 அல்லது 0112860002 எனும் தொலைபேசி இலக்கத்தின்  மூலம் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும்  இராணுவம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த திட்டத்தை இராணுவ மருத்துவப் படை, தடுப்பு வைத்திய மற்றும் மனநல பணிப்பகம், வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகம் , சமிக்ஞ்சை  படையணி,  இராணுவப் பொலிஸ் படைப்பிரிவு  மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் என்பன ஒருங்கிணைந்து  செயற்படுத்துகின்றன.

மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் தகவல் சேமிப்பு  வசதி கொண்ட வாகனங்கள் தெமட்டகொட பகுதியில் (1 வாகனம்), கொழும்பு 15, முகத்துவார பகுதி (3 வாகனங்கள்), கங்காராம மாவத்தை மற்றும் மட்டக்குளிய பகுதி (1 வாகனம்), கொழும்பு 14- கிராண்ட்பாஸ் பகுதி (3 வாகனங்கள்), கொழும்பு 15, புளுமென்டல் வீதி பகுதி (2 வாகனங்கள்) ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக தேவை ஏற்படும் பட்சத்தில் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்துடன் கலந்தாலோசித்து தேவையான இடங்களில் பின்னர் அனுப்பப்படும் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மருத்துவ அதிகாரி ஒருவருடன் கூடிய அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று இந்த திட்டத்தின் முழு செயல்முறையையும்  உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளது.

இந்த திட்டம் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.