மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை கண்காணிக்க முப்படை வீரர்கள் கடமையில்
ஆகஸ்ட் 17, 2021இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து வீதி தடைகள் மூலம் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
கொவிட் -19 பரலலை தடுக்கு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடையினை மீறி வீதி வழியாக நுழைய முயற்சிக்கும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கொவிட் -19 கட்டுப்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியால் குறிப்பிடப்பட்டுள்ள "அத்தியாவசிய சேவைகள்" வகைக்குள் வந்தால் மட்டுமே, ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்குள் நுழைந்து வெளியேற அனுமதி வழங்கப்படும் என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவன தலைவர்களினால் அழைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள், அரச ஊழியர்கள் ஆகியோர் இவ்வாறு மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புப் படைகள், உத்தியோகபூர்வ அடையாள அட்டை, ஒரு நபரைப் பணிக்கு வரும்படி அழைக்கும் எழுத்து மூல ஆவணங்கள், செல்லுபடியாகும் மின்னணு ஆவணங்கள் அல்லது அந்தச் சோதனைச் சாவடிகளில் மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய தகுதியுள்ள வேறு ஏதேனும் சான்று என்பவற்றை இராணுவம் பரிசோதிக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
Tamil