ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
ஆகஸ்ட் 22, 2021திருகோணமலை, குச்சவெளி, ஜயாநகர் பிரதேசத்தில் நேற்று (ஓகஸ்ட்,21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் சுமார் ஒரு மில்லியன் ரூபாவிற்கு பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதற்கமைய, 3 கிலோ 548 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது சட்டவிரோத பொருட்கள் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை நடவடிக்கைகள் கிழக்கு கடற்படை கட்டளையாகத்தினால் திருகோணமலை உட்துறைமுக பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் கொவிட் - 19 பரவலை தடுக்கும் விதிமுறைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் குச்சவெளி பிரதேசத்தில் வசிக்கும் 41 தொடக்கம் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.