சீனாவிடமிருந்து மூன்று இலட்ச தடுப்பூசிகளை பாதுகாப்புச் செயலாளர் பொறுப்பேற்றார்

ஆகஸ்ட் 28, 2021

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28,ஆகஸ்ட்) காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது ஊடகங்களுக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் :- இந்தத் தடுப்பூசிகள் படைவீரர்கள், படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அதிக எண்ணிக்கையிலான படைவீரர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதனால் படைவீரர்களுக்கு மேலதரிகமாக எஞ்சிய தொகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தேவையான தருணத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய சீன மக்கள் குடியரசிற்கும், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன இதன்போது நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் டோங் கருத்து தெரிவிக்கையில் : - இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்டகால உறவு காணப்படுவதுடன், இலங்கையர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சகல சந்தர்பங்களிலும் சீன மக்கள் தங்கள் ஆதரவு கரங்களை நீட்ட ஒருபோதும் தயங்க மாட்டார்கள்" என்றார்.

இந்த தடுப்பூசி தொகுதிகள் கொவிட்-19 தொற்றுநோயை ஒற்றுமையின் மூலம் எதிர்த்துப் போராடுவதற்கு வழங்கப்பட்டதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் பெரும் பங்கு வகிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய சீன மக்கள் குடியரசினால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள மேற்படி ஒரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் போது மேற்படி தடுப்பூ வழங்கல் தொடர்பான ஆவணங்களில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.