சந்தஹிருசேய திட்டம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மீளாய்வு

ஆகஸ்ட் 29, 2021

திட்டமிடப்பட்டவாறு சந்தஹிருசேய தூபியின் நீர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பதை ஆராயும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அனுராதபுரத்திற்கு இன்று (ஓகஸ்ட் 29) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

நாட்டின் உயரமான கோபுரங்களில் ஒன்றான இந்த தூபியின் நிர்மாண பணிகளை ஆய்வு செய்த ஜெனரல் குணரத்ன, முன்மொழியப்பட்ட போதிகாராய, ஆண்டு முழுவதும் எரியும் மங்கள விளக்கு, சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் வருகைதரும் பக்தர்களின் வாகன தரிப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி என்பவற்றை பார்வையிட்டார்.

அத்துடன் அவர், ஓய்வு மண்டபம், அருங்காட்சியகம் ஆகியவற்றின் கட்டுமானப் பகுதிகளுக்கு வருகை தந்து புனித கற்களால் அமைக்கப்பட்ட வளாகங்களின் சமநிலைப் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கமையவே நிர்மாணப் பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தஹிருசேய தூபியில்  சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை பதிக்கும் பணிகளுக்கான அனைத்து முன்னாயத்தங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு புனித வஸ்துக்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தூபியின் நிர்மாணப் பணிகள் நிறைவுற்றதும் இது நாட்டில் காணப்படும் 16 வழிபாட்டுத் தலங்களில் உள்ள மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றாகக் அமையும்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர். தினேஷ் நாணயக்கார பிராந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்த திட்டத்தின் செயற்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.