சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன - பாதுகாப்பு செயலாளர்

செப்டம்பர் 09, 2021
  • சட்டவிரோத போதைப்பொருளுடன் தொடர்புடையோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
  • போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் சிறைச்சாலையில் இருந்தவாறே முன்னெடுக்கப்பட்டது
  • தகவலளிப்போரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்  என பொலிஸ்  தெரிவிப்பு

பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு  போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு  கொள்கை பிரகடணத்திற்கு அமைய, இந்த அரசாங்கம்  பொறுப்பேற்றதிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு சகல சந்தர்பங்களிலும் முன்னுரிமை வழங்கப்பபட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், திட்டமிட்ட குற்றச் செயல்கள், பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இணைந்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஒருவருடம் ஒன்பது மாதம் காலப்பகுதிக்குள் 3200 கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கொவிட் நிலைமைய எவ்வாறு இருந்த போதிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் உறுதி அளித்தார்.

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செப்டம்பர். 09) இடம்பெற்றது.  
இதில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ண கலந்து ஆகியோர் கொண்டனர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் :-

சிறைச்சாலை அமைப்பில்  காணப்பட்ட ஆழமான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக உண்ணிப்பாக அவதானித்து "சிறைச்சாலையில்  இருந்தவாறு  வெளியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன்  தொடர்புகொள்வதைத் தடுக்கும் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் இருந்தவாறே கணிசமான குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்படுவதை  கண்டறிந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதன் பலனாக தற்பொழுது குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றார்.

பூஸ்ஸ சிறைச்சாலையானது முதற் தடவையாக அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இங்கு மாற்றப்பட்டு அவர்கள் வெளி உலகுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் தொலைத் தொடர்பு வசதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்கான விசேட பாதுகாப்பு முறைமை நீர்கொழும்பு, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளுக்கும் அமுல்படுத்தப்படும் என்றார்.

இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரங்கள் தொடர்பாக விளக்கமளித்த ஜெனரல் குணரத்ன, 20,949 கிலோ கிராம் கேரளா கஞ்சா, 42,354 போதைப்பொருள் கப்ஸியூல்கள் மற்றும் 104,097 போதை  மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.  

"நாட்டுக்குள் போதைப்பொருள் நுழையும் அனைத்து வழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக" அவர் மேலும் தெரிவித்தார்.

கடலுக்குள் நுழையும் நபர்கள் தங்கள் படகுகளை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால்  இது தொடர்பில் அவதானமாக  செயற்படுமாறு மீன்பிடி படகு உரிமையாளர்களிடம் நாட்டைச் சூழவுள்ள மீனவ சமுகத்தினரிடமும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் உலுகேதென்ன கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ண வலியுறுத்தினார்.

வைரஸ் தொற்று நோய் பரவுவலைத் தடுக்க இராணுவம் ஏன் தலையிடுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் "படை வீரர்கள் தங்கள் இராணுவ பயணத்திட்டத்தின் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயனப் போர் ஆகியவற்றில் அதிக நிபுணத்துவம் பெற்றுள்ளனர், எனவே, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நாங்கள் அவர்களுடன் எங்கள் தொழில்முறை மருத்துவ அதிகாரிகளை நியமித்துள்ளோம்" என்றார்.

"தடுப்பூசிகளை  பெற வரும் அனைத்து பொதுமக்களுக்கும்  தடுப்பூசி வழங்குமாறு எங்கள் அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம்," என்று அவர் உறுதிப்படுத்தினார்.

"நாட்டில்  ஒன்லைன் விபச்சார விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களையும் வலைவீசி தேடும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், இறுதியில் அவர்கள் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார்.

இதேவேளை,  தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட வேளையில் தளர்வான நடைமுறை கடைப்பிடிக்கப்படு பகு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், "தற்போதைய நிலையை நாம் மனிதாபிமான கோணத்தில் பார்க்க வேண்டும்" என்று விளக்கினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  

இந்த சம்பவங்கள்  தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் எவ்வித அச்சமின்றி அந்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர்,  குறித்த சம்பவம் தொடர்பான தகவலளிப்போரின்  இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.