நுவரெலியா வனப்பகுதியில் காணாமல்போன யுவதி படையினரால் மீட்பு
செப்டம்பர் 11, 2021நுவரெலியா டின்சின் தோட்ட வனப்பகுதிக்குள் கடந்த 5ம் திகதி காணாமல் போன யுவதி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த வியாழக்கிழமை மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு உடனடியாக நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
25 வயதுடைய குறித்த யுவதியினை தேடும் பணிகளில் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்,
அடர்ந்த வனப்பகுதிக்குள் மோசமான வானிலை நிலவிய போதிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் முற்றாக வறண்ட நிலையில் காணப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து குறித்த யுவதியினை மீட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பம்பரகல, அளுத்கொலனிய, சாந்திபுர என்னும் முகவரியில் வசிக்கும் குறித்த யுவதி, அவருடைய தாயாருடன் விறகு சேகரிக்க சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலிய பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.