வருடாந்தம் ரூபா 100 கோடி திறைசேரிக்கு வழங்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
செப்டம்பர் 13, 2021-
திணைக்களமாக மாற்றப்பட்டு இன்றுடன் 15 ஆவது ஆண்டு பூர்த்தி
- நாட்டின் முன்னேற்றத்துக்காக பேதங்களின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அர்ப்பணிப்பான பணி
ஸாதிக் ஷிஹான்...
அனைத்து வேலைத் திட்டங்களின் பலனாக வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் ரூபாவை (நூறு கோடி) வருமானமாக ஈட்டும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் அதனை அரச திறைசேரிக்கு வழங்குகின்றது. சிவில் பாதுகாப்புப் படையினரின் கௌரவமான சேவையை தாய்நாட்டிற்கு தேவையானதாக மாற்றியமைப்பதே எனது இலக்கு என்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்ஜன் லமாஹேவகே தெரிவிக்கின்றார்.
சிவில் பாதுகாப்புப் பிரிவானது திணைக்களமாக மாற்றப்பட்டு இன்றுடன் 15 ஆவது ஆண்டு பூர்த்தியாகின்றது. அதனை முன்னிட்டு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்ஜன் லமாஹேவகே தினகரன் பத்திரிகைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கினார்.
கேள்வி: சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பற்றி சிறிய அறிமுகத்தை கூற முடியுமா?
பதில்: நாட்டிலுள்ள எல்லைக் கிராமங்களில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக காணப்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து அந்தக் கிராமங்களை பாதுகாப்பதற்காக அக்கிராமங்களில் வாழும் பொதுமக்களின் உதவியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (அப்போதைய பாதுகாப்புச் செயலாளர்), பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (அப்போதைய ஜனாதிபதி) ஆகியோரின் எண்ணக்கருவுக்கு அமைய தேசிய ஊர் காவல் சேவை (ஊர் காவல் படை) 1980ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 12 துளை அளவுள்ள துப்பாக்கிகளும் பழுப்பு நிறமான சீருடைகளும் வழங்கப்பட்டன. அவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. ஆனால் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் மாத்திரம் வழங்கப்பட்டு வந்தன.
ஹொரண, கும்புக்க முகாமில் பயிற்சியளிக்கப்பட்ட இவர்கள், பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவையில் அமர்த்தப்பட்டு நாளாந்த கொடுப்பனவு மாத்திரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர்களின் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2006 செப்டம்பர் 13ஆம் திகதியிட்ட 1462/20ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஊர்காவல் சேவை முழுமையாக மீளமைக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களமாக மீளஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாறு திணைக்களமாக மாற்றப்பட்ட இந்த சிவில் பாதுகாப்புப் படை தனது 15ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.
கேள்வி: மனித வளம், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவம் எவ்வாறு அமைந்துள்ளது?
பதில்: சுமார் 41,500 பேர் உள்வாங்க அனுமதிக்கப்பட்டு ஒரு மாத இராணுவ பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இராணுவ சீருடையை ஒத்த இரு வகையான சீருடைகள் வழங்கப்பட்டதுடன் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளமும் வழங்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர இதன் முதலாவது பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டதுடன், இதுவரை ஆறு பணிப்பாளர் நாயகங்களின் கீழ் செயற்பட்டுள்ள இந்த திணைக்களம், தற்போது முப்படைகள் மற்றும் பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 75 அதிகாரிகளையும் 35ஆயிரத்திற்கும் அதிகமான மனிதவளத்தைக் கொண்டதாகவும் பலம் பெற்ற திணைக்களமாக காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து இனத்தவர்களும் இந்த திணைக்களத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது விஷேட அம்சமாகும். நாடளாவிய ரீதியில் 24 பிராந்திய படையணிகளைக் கொண்ட இந்த திணைக்களத்தின் கீழ் அநுராதபுரத்திலுள்ள மிஹிந்தலை, கல்கிரியாகம, அம்பாறையிலுள்ள பஹலலந்த, புத்தளத்திலுள்ள கல்பிட்டி மற்றும் களுத்துறையின் சேருபிடிய ஆகிய பிரதேசங்களில் ஐந்து பயிற்சி நிலையங்கள் உள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு ஒத்துழைக்கும் வகையில் எல்லைக் கிராமங்களைப் போன்று படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதுடன் இதுவரை 545 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளதுடன், 425 பேர் அங்கவீனமுற்றுள்ளனர்.
கேள்வி: சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தற்போது எவ்வாறான சேவைகளை முன்னெடுக்கின்றது?
பதில்: தேசிய பாதுகாப்பிற்கு மாத்திரம் முழுமையாக பங்களித்து வந்த நிலையில் யுத்தம் நிறைவுற்ற பின்னர் நாட்டின் தேசிய அபிவிருத்தி செயற் திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி, விவசாயத்துறை மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றோம். இதன் பலனாக தற்பொழுது விவசாய உற்பத்தி, பயிற்செய்கை, கஜூ உற்பத்தி, சோளப் பயிர்ச் செய்கை, விலங்கு உற்பத்தி, நிர்மாணப் பணிகள், சேதனப் பசளை, சமயத் தலங்களின் நிர்மாண மற்றும் பாதுகாப்புப் பணிகள், தொல்பொருள் பிரதேச பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து யானை வேலி அமைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
கேள்வி: பிரதான செயற்திட்டங்கள் எவை? அவை தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனவா ?
பதில்: பிரதான செயற் திட்டங்கள் பலற்றை முன்னெடுக்கின்றோம். விஷேடமாக கைவிடப்பட்ட திட்டங்கள் அல்லது செய்ய முடியாது என்ற பிரதேசங்களிலேயே தற்போது பல்வேறு வேலைத் திட்டங்கள் இரவு பலகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொண்டச்சியில் 1500 ஏக்கரில் கஜூ தோட்டம் உள்ளது. இதில் 900 ஏக்கரில் இப்போது கஜூ உற்பத்தி செய்யப்படுகின்றது. புதிதாக 500 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாத்திரம் 1 இலட்சத்து 300 கிலோ கஜூ விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 450 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
காட்டு யானைகளின் பாதிப்பிலிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்காக வேலி அமைத்தல் நடவடிக்கைகளுக்கு 5000 பேரும், அரச நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு 1900 பேரும், பொலிஸ் நிலையங்களில் பொலிஸாருடன் இணைந்து சேவையாற்றவென 2350பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று 2200 ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்யப்படுகின்றது. 1800 ஏக்கர் காணியில் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. கெப்பித்திகொல்லாவயில் 20 ஏக்கர் காணியில் மிளகாய்ச் செய்கை, 138 ஏக்கர் காணியில் தெங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இதில் அரிசி உற்பத்தியில் கூடுதல் முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 2200 ஏக்கர் வயல் பரப்பின் ஊடாக 2000 தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு விவசாய அமைச்சுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சுடன் இணைந்து நெல் உற்பத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த செயற் திட்டத்திற்கு விவசாய அமைச்சு, கிழக்கு மாகாண ஆளுநரின் பங்களிப்புகள் வரவேற்கத்தக்கவை. உள்நாட்டு தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: அரசின் சேதனைப் பசளை பயிர்ச் செய்கை திட்டத்திற்கான பங்களிப்பு என்ன ?
பதில்: நஞ்சற்ற தரமான உணவு வகைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தினது இலக்காகும். எனவே சேதனைப் பசளை நடவடிக்கைகளை தேசிய செயற்திட்டமாக முன்னெடுக்க அரசு ஆரம்பித்துள்ள நிலையில், இத்திட்டத்திற்கு எமது பங்களிப்புக்களையும் வழங்கும் பொருட்டு இம்முறை விஷேடமாக சேதனைப் பசளை பயிர்ச் செய்கை நடவடிக்கையை நாமும் ஆரம்பித்துள்ளோம். அனைத்துப் பிரிவினருக்கும் 2000 தொன் உற்பத்தி செய்ய இலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதனை 25 ஆயிரம் தொன் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கேள்வி: தங்களது உற்பத்திகளின் மூலம் அரச திறைசேரிக்கு எவ்வாறான பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன?
பதில்: மேற்படி அனைத்து வேலைத் திட்டங்களின் பலனாக வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அதனை அரச திறைசேரிக்கு வழங்குகின்றது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் திணைக்களங்களில் நாமும் முன்னணியில் செயற்படுகின்றமை விஷேட அம்சமாகும். இதற்கமைய கடந்த 2020ஆம் ஆண்டு மாத்திரம் 978 மில்லியன் ரூபாவை வருமானமாக திறைசேரிக்கு வழங்கியுள்ளோம். கொரோனா நிலைமை காணப்படுகின்ற போதிலும், இவ்வாண்டு இதுவரை மாத்திரம் 337 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் வருட இறுதிக்குள் அவை சுமார் 900 மில்லியன் வருமானமாக அடையும் என நம்புகின்றோம். அத்துடன் நெல் விற்பனை மூலம் 85 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
கேள்வி: அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு பணிகளில் வழங்கப்படும் பங்களிப்புக்கள் எவ்வாறு உள்ளன?
பதில்: எமது படையினரில் 95 வீதமானவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். எனவேதான் விவசாயத்துறை சார்ந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. மேல் மாகாணம், கொழும்பு பிரதேசங்களில் அலுவலக செயற்பாட்டாளர்கள், நடனக் கலைஞர்களே உள்ளனர். இது தவிர நிர்மாண, பாதுகாப்பு, மேற்பார்வை நடவடிக்கைகளில் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படைவீரர்களை நினைவு கூரும் வகையில் அனுராதபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிருசேய, மிஹந்தலை, தீகவாபி போன்ற விகாரைகளின் நிர்மாண, பாதுகாப்புப் பணிகள், ஏனைய சமயத் தலங்கள், விகாரமகாதேவி பூங்கா, பாராளுமன்ற பூங்கா, காக்கைதீவு மற்றும் கரையோர சுத்திகரிப்பு போன்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள பல திட்டங்கள் எமது படைவீரர்களால் கண்காணித்து புனரமைக்கப்படுகின்றன. கொழும்பிலுள்ள அரச ஒசுசல பிரதான காரியாலம் போன்றன எம்மால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும். நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேயவிற்கு தேவையான கற்களை எலயாபத்துவ, ஓயாமடுவ பகுதிகளில் நாமும் தயாரித்து வருகின்றோம்.
கேள்வி: எவ்வாறான சமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன ?
பதில்: வடக்கு, கிழக்கிலும் எமது படையணிகள் உள்ளன. விஷேடமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் விசுவமடு பகுதிகளில் எமது மூன்று படையணிகள் உள்ளன. இதில் 2500க்கும் அதிகமானவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். தற்போழுது எமது திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களிலும் மேற்படி தமிழ் இளைஞர்களே ஈடுபடுகின்றனர். ஒரு பிரிவில் சுமார் 30 சிங்களவர்கள் மாத்திரமே உள்ளனர். ஏனையோர் அனைவரும் தமிழர்களே. இது ஒரு புரிந்துணர்வுக்கான நல்ல சந்தர்ப்பமாகும்.
மேலும் வடக்கு, கிழக்கில் குடிநீர் சுத்திகரிக்கும் 295 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கை எம்மை சார்ந்தது. இதற்காக 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த பிரதேசத்தில் சிறுநீரக நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறைந்துள்ளது.
கேள்வி: கல்வி நடவடிக்கைகளுக்கான பங்களிப்புகள் எவை?
பதில்: நாடளாவிய ரீதியில் 545 முன்பள்ளிகள் நடத்தப்படுவதுடன் அவற்றில் ஆசிரியர்களாகவும் அவர்களது உதவியாளர்களாகவும் 1100 பேர் சேவையாற்றுகின்றனர். இதற்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மற்றும் பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளுக்கு 184 ஆசிரியர்களை வழங்கியுள்ளோம். இவர்களில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களே அதிகமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பயிற்றப்பட்டவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான சேவைகளை வழங்க தயாராகவுள்ளனர்.
கேள்வி: சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை மேலும் முன்னேற்ற தங்களது எதிர்பார்ப்புக்கள் எவை?
பதில்: சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நீண்ட காலம் வெற்றிகரமாக பயணிக்கும் வகையில் திட்டங்களை தீட்டுதல், பலப்படுத்தல். கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் போன்றவைகளே எனது பிரதான எதிர்கால இலக்காகும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கின்றது. இதன் பலனாக தலைமையகத்தை பலப்படுத்தி துறைசார் நியமனங்கள், ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்டு மனித வளத்தை மேம்படுத்தவே எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு துறைசார் நபர்களை இணைத்துக் கொள்ளும் பட்சத்திலேயே ஜனாதிபியினதும் அரசினதும் இலக்கை அடைய முடியும்.
Courtesy - www.thinakaran.lk