எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
செப்டம்பர் 17, 2021எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் அதிமேதகு ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப்டம்பர், 17) இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த எகிப்திய தூதுவருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது எகிப்திய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தொடர்ந்து இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ பயிற்சி உட்பட பாதுகாப்பு விடயங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த தூதுவர் இதன்போது தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அதேவேளை, அதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் அதை உறுதி செய்தார்.
மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பு கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதரகத்தின் பிரதி தூதுவர் கரீம் அபுலெனெய்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.