பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு

செப்டம்பர் 23, 2021

தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டக், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் (செப்டம்பர், 23) )இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இரு பிராந்திய நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் சேவைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை தேசத்தின் எழில், கலை, கலாச்சாரம் என்பனவால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையர்களின் விருந்தோம்பலை பெரிதும் பாராட்டினார். அத்துடன் அவர் நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்த பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.

இலங்கை தீவில் உயர்ஸ்தானிகராக தான் பதவி வகித்த காலப்பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக அவர் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

பிரியாவிடை பெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரினால் வழங்கப்பட்ட சேவையினை பாராட்டி பாதுகாப்பு செயலாளரினால் அவருக்கு  நினைவுச் சின்னமொன்றும் பரிசளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.