--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் புதிய கேட்போர்கூடம் திறந்துவைப்பு

ஆகஸ்ட் 06, 2019

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தை மேலும் விரிவு படுத்தும் வகையில் புதிய கேட்போர்கூடம் ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (ஆகஸ்ட், 04) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கேட்போர்கூடத்தினை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கேட்போர் கூட நிர்மாணப்பணிகள் கடற்படை சிவில் பொறியியல் கிளையின் தொழிநுட்பத்திறன், மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புதிய வசதியானது நவீன உபகரணங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அமரும் வகையிலான இருக்கைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

இப்புதிய கேட்போர்கூட திறப்புவிழாவில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உப வேந்தர், எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய, தெற்கு வளாகத்தின் பீடாதிபதி, முப்படை அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிகையிலான கற்கை நெறி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981ஆம் ஆண்டில் 68ஆம் இலகக் பாராளுமன்றச் சட்டத்தின் பிரகாரம் "ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அகாடமி" எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டில் 27ஆம் இலகக் சட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு பாதுகாப்பு கற்கையில் இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களை வழங்கும் அதிகாரம் பெற்று திகழ்கின்றமை குறிப்பிடத்தக்ககது.

சூரியவெவ, செவனகலயில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகமானது 2015ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி கௌரவ. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.