‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு -2019’ இம்மாதம் ஆரம்பம்

ஆகஸ்ட் 06, 2019

2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) ஆரம்பமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற உள்ள இம்மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி நிறைவடையுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எட்டாவது ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 'உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சர்வதேச பாதுகாப்பு மாநாடு, பாதுகாப்பு கருத்தரங்கு எனும் பெயரில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இம் மாநாட்டில் 60 நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் இப் பாதுகாப்பு மாநாடு 2016ஆம் ஆண்டு முதல் கொழும்பு பாதுகாப்பு மாநாடு எனும் பெயரால் அழைக்கப்படுகின்றது.