இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சி
ஒக்டோபர் 04, 2021எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த கேர்ணல் பிரகாஷ் குமார் தலைமையிலான இந்திய இராணுவ வீரர்களை இந்த கூட்டுப்பயிற்சியின் உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் பி.என். கோடெல்வத்த மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோர் வரவேற்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் 53 பிரிவின் பொது கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறவுள்ள இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் விஜயபாகு காலாட்படை பிரிவு வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேர்ணல் கிரிஷ் கோடியல், கேர்ணல் ஜோன் டேனியல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் ஜுலகே மீரா ஆகியோர்கள் பார்வையாளர்களாக செயல்பட்டு கூட்டுப் பயிற்சியினை மதிப்பீடு செய்யாவுள்ளனர்.
இந்திய-இலங்கை இராணுவங்களுக்கிடையிலான இருதரப்பு கூட்டுப் பயிற்சியானது, நாடுகடந்த பயங்கரவாதம், இடைச்செயல்பாட்டுதிறன், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், இரு தரப்பினருக்கிடையிலும் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற புரிதல்களை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்யும் இந்த வருடாந்த கூட்டுப்பயிற்சி,அண்டை நாடுகளான இந்திய மற்றும் இலங்கையில் மாறி மாறி இடம்பெற்றுவருகிறது.
இந்த கூட்டுப்பயிற்சி கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.