இராணுவத்தினரால் மேலும் பல நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு
ஒக்டோபர் 09, 2021அரசாங்கத்தின் "வாரி செளபாக்யா" திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் மகாவலி "எல்" வலயத்தில் காணப்படும் நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
களப் பொறியாளர் படையணியின் மேற்பார்வையின் கீழ் 11வது கள பொறியியலாளர் படையினர் மகாவலி அதிகார சபையின் நிதி மூலம் குறித்த பகுதியில் காணப்படும் நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பு செய்யவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மகாவலி "எல்" வலயத்தில் காணப்படும் மொத்தம் 10 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இராணுவத்தின் பொறியியலாளர் படையினரால் முன்னெடுக்கப்படும் குறித்த குளங்களின் புனரமைப்புப் பணிகள், கள பொறியியலாளர் படையணியின் பொதுக்கட்டளையகம் மற்றும் களபொறியாளர் படைப்பிரிவு என்பவற்றின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளன.
மகாவலி அதிகார சபையுடன் இராணுவத்தின் பொறியியலாளர் படையணி இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 700 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்ச்செய்கை காணிகளுக்கு முறையான நீர் பாசனம் கிடைக்கப்பெற உள்ளதனால் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மை அடைய உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.