துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தலுக்காக புதிய விண்ணப்பப் படிவம் அறிமுகம்

ஒக்டோபர் 22, 2021

துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்கான புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வஇணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

துப்பாக்கிகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பாதுகாப்பு அமைச்சிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களுக்கோ அனுப்பி வைக்க முடியும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 2022ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு (2022, பெப்ரவரி 28) முடிவடைந்த பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது.

அனுமதி வழங்கப்படாத துப்பாக்கியினை தன் வசம் வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22வது சரத்துக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.