முல்லைத்தீவில் மேலும் நான்கு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கையளிப்பு
ஒக்டோபர் 22, 2021முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் வீடற்ற பொதுமக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
இதற்கமைய குறித்த வீடுகள் கிரணமடு, மண்டகண்டலில் வசிக்கும் திருமதி ராமச்சந்திரன் மதிவாதினி, மாங்குளத்தில் வசிக்கும் திரு விக்னேஷ்வரன், ஒட்டுசுட்டனில் வசிக்கும் திரு சந்திர குமார் மற்றும் முத்தியங்காட்டுக்குளத்தில் வசிக்கும் திருமதி ராசரத்தினம் ராஜேஸ்வரி ஆகிய பயனாளிகளுக்கு வீட்டுத் தளபாடங்கள் கொண்ட நான்கு வீடுகள் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன,
14 வது இலங்கை சிங்கப் படையனி,23 வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவினர், 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி ஆகியவற்றின் ஆளணி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் என்பவற்றை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளுக்கான நிதி உதவி தெற்கு பகுதியை சேர்ந்த பௌத்த தேரர்கள் மற்றும் நன்கொடையாளர்களினால் அளிக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தவைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்ற புதுமனை புகுவிழாவில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தவைமையக தளபதி கலந்துகொண்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.