இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை தொடங்குகிறது
ஒக்டோபர் 25, 2021இந்திய கடற்படையைச் சேர்ந்த 01வது பயிற்சிப் படைக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர்,24) இலங்கை வந்தடைந்தன.
இதற்கமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஷர்துல்' மற்றும் 'மகர்' ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அதேவேளை, இந்திய கடற்படைக்கு சொந்தமான 'சுஜாதா', 'சுதர்ஷினி', 'தரங்கிணி' மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 'விக்ரம்' ஆகிய கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவழைக்கப் பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
வருகை தந்துள்ள கப்பல்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
குறித்த பயிற்சி கப்பல்கள் ஒக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கொழும்பு மற்றும் திருகோணமலையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.