கடலோர பாதுகாப்பு படையின் சர்வதேச கூட்டுப் பயிற்சி நிகழ்வு நிறைவு
நவம்பர் 27, 2021எதிரிக் கப்பல்கள், கடற்கொள்ளை, மற்றும் கடத்தல், மற்றும் சுங்க நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படைவீரர்களுக்கான பாடநெறிகளை உள்ளடக்கிய பயிற்சிகள் மற்றும் அதன் மேம்பட்ட பயிற்சி நெறிகள் என்பன அண்மையில் நிறைவடைந்தது.
இந்தப் பயிற்சி நெறி ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தடுப்பு அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தால், இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் நடத்தப்பட்டது.
இந்த சர்வதேச பயிற்சி நிகழ்வானது, இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பிராந்திய சட்ட அமலாக்கப் பயிற்சிக்காக கடலோர பாதுகாப்பு படையினரால் நடாத்தப்படும் சர்வதேசப் பயிற்சியின் மற்றுமொரு முக்கிய பயிற்சி நிகழ்வாக இது கருதப்படுவதாகவும் கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டத்தினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், ஐ. நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தடுப்பு அலுவலகத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் திரு. கிரேக் லுன் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் 1ம் லெப்டினன்ட் எம். ஹபீப் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்ததாக கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பங்களாதேஷ் கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ஐந்து வீரர்களுக்கு நிறைவு விழாவின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.