82 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
டிசம்பர் 07, 2021யாழ்ப்பாணம், மதகல் கடல் பகுதியில் கடற்படை நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் 82 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் குறித்த பகுதியில் நிலை நிறுத்தப்பாட்ட்டிருந்த கடற்படை படகின் மூலம் ஏழு சாக்கு பொதிகளில் பொதிசெய்யப்பட்டிருந்த சுமார் 275 கிலோ (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சா மீட்கப்பட்டதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் இருந்து மீட்கப்பட்ட சாக்கு பொதிகளை சோதனையிட்டபோது 110 கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முற்பட்ட வேளை அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டது.
படகின் மூலம் கஞ்சாவினை கரைக்கு கொண்டு செல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் கடற்படையினர் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை கரைக்கு மாற்ற முடியாததையடுத்து கடத்தப்பட்ட கஞ்சாவை கடலுக்குள் வீசியிருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப்பெருமதி சுமார் 82 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்கள் மதகல் பகுதியில் வசிக்கும் 25 முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.