கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு

ஜூன் 23, 2019

திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) நேற்று (ஜுன், 22) இடம்பெற்ற கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து கொண்டார்.

கிழக்கின் துறைமுக நகரமான திருகோணமலையிலுள்ள கடற்படையின் முதல்தர கற்கை பீடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வரவேற்றதுடன், ஜனாதிபதி அவர்களுக்கு விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையொன்றும் அளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் கடற்படையின் பாரம்பரிய மற்றும் மரபுகளுக்கமைய நேற்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 32, 33 வது ஆட்சேர்ப்பு மற்றும் 59 வது பயிலுனர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் இருந்து 89 இடைநிலை அதிகாரிகள், ஆணை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளாக நியமனம் பெற்றுக்கொண்டனர். இதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 32வது (தொழிநுட்பம்) ஆட்சேர்ப்பில் இருந்து 19 அதிகாரிகளும், 33வது ஆட்சேர்ப்பில் இருந்து 44 அதிகாரிகளும் 59 வது பயிலுனர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பில் இருந்து 26 அதிகாரிகளும் பிரதம அதிதியிடமிருந்து அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிகளாக தமது அதிகார பத்திரத்தை பெற்றுக்கொண்டனர்.

மேலும், பயிற்சியின்போது தமது திறமைகளை வெளிப்படுத்திய தெரிவுசெய்யப்பட்ட இடைநிலை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மதத்தலைவர்கள், வடமாகான ஆளுநர், விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கொமடானட், வெளியேறிச்செல்லும் அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பெரும் எண்ணிகையிலான கடற்படை வீரர்களும் கலந்துகொண்டனர.