உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு…

டிசம்பர் 09, 2021

  •     இந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை…
  •   இலங்கையின் உயர்க்கல்வித் துறையூடாகப் பொருளாதாரத்துக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் வழிமுறையாக மாற்ற வேண்டும்…

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) பிற்பகல் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்களாகவும் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாமைக்குக் காரணமில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால், அதைச் செய்ய முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள் என்ற பழைய

ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

“நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

“காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த இராணுவப் படை அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச்.ரொத்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன் எஸ்.டி.கருணாசேன, சிறந்த விமானப்படை அதிகாரியாக பறக்கும் அதிகாரி எஸ்.கே.எஸ்.ருக்ஷான், அதிசூர அதிகாரியாக லெப்டினன் எல்.டி.ஐ.லியனாரச்சி ஆகியோர்,  ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம், 1981இல் நிறுவப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அது முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டக் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, முப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாநிதிப் பட்டம் மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமாக பொதுநலவாய அமைப்பின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ஜெராட் டி சில்வா, துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


(ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய முழுமையான உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

09.12.2021

இன்று பிற்பகல் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தமது கல்விக் காலத்தில் கடுமையாக உழைத்து இந்த நிகழ்வில் பட்டம் பெறுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அவர்களின் எதிர்காலத் தொழில் வாழ்க்கையில் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம், இலங்கையின் தனித்துவமான ஒரு நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகளுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட போதிலும், தற்போது அது பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைப் பணியாளர்களுக்கான மூன்றாம் நிலைக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

பல பட்டப்படிப்பு வேலைத்திட்டங்களுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்தியில் இந்தப் பல்கலைக்கழகம் கவரும் வகையில் உள்ளது.

தற்போது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இலங்கையின் சிறந்த மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ளதோடு, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மிகவும் திறமையான பட்டதாரிகளை உருவாக்குகிறது.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளின் தலைமைத்துவத் திறன்கள், குழுப்பணித் திறன்கள், ஒருமைப்பாடு மற்றும் தேசபக்தி ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்றிருப்பதோடு, சேவை வழங்குனர்களுக்கு மத்தியில் இத்திறமைகளுக்கு உயர் கேள்வி உள்ளது.

இந்த நிறுவனத்தில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு உறுதியளிக்கக்கூடிய வகையிலான தரத்துக்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்க சவால்கள் இல்லாமல் இருக்கவில்லை.

இன்றும் கூட, சில குழுக்களால் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு நன்மைகளை வழங்கியுள்ள வேலைத்திட்டத்தை தடுப்பதே, இந்தக் குழுக்களின் தேவையாக இருக்கின்றது.

பல தசாப்தங்களாக இலங்கையின் கல்வி முறைமையைப் பின்னுக்குத் தள்ளும் இந்த அணுகுமுறை எனக்குப் புரியவில்லை.

நமது நாட்டின் கல்வி முறைமையானது, இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பது இரகசியமல்ல.

பொதுவாக, இலங்கையில் வழங்கப்படும் கல்விக்கும் 21ஆம் நூற்றாண்டில் நமது நாடு வளர்ச்சியடையத் தேவையானவற்றுக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது.

இதனால்தான் கல்விச் சீர்திருத்தங்கள், குறிப்பாக நமது மூன்றாம் நிலைக் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறைந்தபட்சம், கணிணிகளின் மூலம் பணிபுரிவதற்கான சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

விமர்சன சிந்தனை, தொழில்முனைவு மற்றும் ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட இன்றைய உலகின் வெற்றிக்குத் தேவையான மற்ற திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இவற்றில் பல சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நமது பல்கலைக்கழகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அடுத்த ஆண்டு இன்னும் பல மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், எமது பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு உற்பத்தித் திறன் கொண்ட குடிமக்களாக இருப்பதற்குத் தேவையான திறன்கள் மற்றும் திறமைகளை அவர்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன்.

எவ்வாறாயினும், இலங்கையின் கல்வி முறை தொடர்பான இன்னும் பெரிய பிரச்சினை அதன் கொள்ளளவு கட்டுப்பாடு ஆகும்.

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை எனது வெற்றிகளில் ஒன்றாகும்.

இவ்வாறு அதிகரித்தாலும் கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்குப் பிரவேசிக்க முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர்.

இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும்.

இந்தப் பல்கலைக்கழகங்களின் கொள்ளளவின்மை தொடர்பில் ஏற்படும் விளைவுகள், பலர் அடையாளம் கண்டுள்ளதை விடப் பாரதூரமானதாகும்.

இது, முழுக் கல்வி முறைமை வாய்ப்புகளைத் தொடர்ந்து குறைக்க வழிவகுத்துள்ளது.

இதன் பிரதிபலனாக, மாணவர்கள் வெற்றிபெற உதவுவதை விட அவர்கள் தோல்வியடைவதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் கட்டமைப்புகளே திட்டமிட்டுள்ளன.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தும், உயர்தரத்தில் கல்வி கற்கத் தகுதி பெறாத பெருந்தொகையானவர்களிடம் இதனை நாம் காண்கிறோம்.

ஒவ்வொரு வருடமும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெருந்தொகையினர் மூலம் இதனைக் கண்டுகொள்ளலாம்.

இந்த மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் அதிக செலவு ஏற்படுவதோடு, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாடு இழக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், வெளிநாட்டிலேயே வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதால், சிறந்த இளைஞர் சமுதாயத்தை இந்நாடு இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலையளிக்கிறது.

வருமானம் குறைந்த பெற்றோரைக் கொண்ட மாணவர்கள், ஏனைய பல்வேறு பாடநெறிகளைத் தொடர்கின்றனர். அவ்வாறான பாடநெறிகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழுமையான கல்வியை வழங்குவதில்லை.

மேலும் சிலர், மேலதிகக் கல்வியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைத் தேடிக்கொள்கின்றனர்.

நம் நாட்டின் பல்கலைக்கழகக் கல்விக்கு உயர் மதிப்பு காணப்படுவதால், அவ்வாறான கல்வி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் என்ற அடிப்படையில், வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களாகவே தம்மை எண்ணிக்கொள்கிறார்கள்.

இவ்வாறான கொடுமையான நிலையைத் தொடர ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல.

பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாது என்பதற்கும் காரணம் இல்லை.

இதைச் சாத்தியமாக்க, சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால், அதைச் செய்யலாம்.

பாரம்பரிய அணுகுமுறைகள் அத்தகைய நிறுவனங்கள் நிறுவப்படுவதைத் தடுக்கின்றன என்றால், அவ்வாறான எண்ணக்கருக்கள் சவாலுக்குட்படுத்தப்பட வேண்டும்.

அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், “பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள்” என்ற பழைய ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை.

நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்துவதற்காக அநியாயமான முறையில் பயன்படுத்தப்படும் கடந்த காலத்துக்குரிய இந்தக் காலங்கடந்த, அடிப்படைகளற்ற சொல்லாடல்களுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டும்.

இப்போது இதைச் செய்யாவிட்டால், இந்தக் குறுகிய மனப்பான்மையால் இன்னும் பல தலைமுறை மாணவர்கள் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு இடம்பெறுவதை அனுமதிக்க நான் தயாராக இல்லை.

அரச துறைக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தங்கள் கல்விக்காக பணம் செலுத்துவதென்பதன் மூலம் அவை பட்டங்களை விற்கும் நிறுவனம் என்று அர்த்தம் இல்லை.

இவ்வாறான பலவீனமான காரணங்களுக்காக அரச துறைக்கு வெளியில் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் துக்கமான விடயம் மாத்திரமன்றி, அது ஒரு குற்றமும் ஆகும்.

அரச நிதியுதவி அல்லது தனிப்பட்ட நிதியின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது என்ற பாகுபாடு இன்றி, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தரத்தையும் ஒழுங்குபடுத்துவதும் பராமரிப்பதும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

மேலும், கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு பல்கலைக்கழகமும் அதன் தரத்தைத் தொடர்ந்து பேணவில்லை என்றால், அதன் செயற்பாட்டை இழந்துவிடும்.

பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை குறையும் போது, எந்தப் பல்கலைக்கழகமும் அதன் தரத்தைப் பேணாது விட்டால், செயற்பாடுகளை நிறுத்திவிடும்.

இலங்கையில் இன்னுமின்னும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க அனுமதிப்பதன் மூலம், அனைத்து மட்டங்களிலும் உள்ள மாணவர்களைப் போன்றே விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலும் அதிக போட்டிகள் உருவாக்கப்படும்.

இலங்கையில் அதிகமான பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இத்தகைய போட்டிச் சூழலில் வெற்றியடையும் திறன் மற்றும் தம்மீது நம்பிக்கை இல்லாதவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

அவர்களின் ஆட்சேபனைகளை எவ்வளவு விரைவாகச் சமாளித்து, இந்தப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவோ, அவ்வளவு விரைவாக நமது மாணவர்களுக்கும் நமது நாட்டுக்கும் நன்மையாக அவை இருக்கும்.

தற்போது அரச பல்கலைக்கழகங்கள் மூலம் இலங்கையில் வழங்கப்படுகின்ற சேவைகள் மற்றும் கல்விக்கு அப்பால் பலதரப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி முறை இலங்கையில் இருந்தால், அவை வெளிநாடுகளில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களையோ அல்லது வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் புலமைப்பரிசில்களைப் பெறுபவர்களையோ இந்நாட்டிலேயே இருக்க ஊக்குவிக்கும் ஒரு காரணியாக அமையும்.

நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளிலிருந்தும் தொலைதூர நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கவும் முடியும்.

காலப்போக்கில், இது இலங்கையின் உயர்கல்வித் துறையை பொருளாதாரத்திற்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்.

இது தொடர்பில் இலங்கை ஏற்கெனவே ஏனைய நாடுகளை விடவும் பல தசாப்த காலங்கள் பின்தங்கி இருப்பது துரதிஷ்டவசமானது.

இருப்பினும், இந்த மாற்றத்தைச் செய்ய இன்னும் தாமதமாகவில்லை.

நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது அதன் உயர்க்கல்வி கட்டமைப்பில் இந்தப் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

கடந்த கால நடைமுறைகள், மரபுகள், அல்லது காலங்கடந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் காரணமாகத் தற்போதைய நிலைமைக்குச் சுருக்கிக் கொள்ளாமல், சிறந்த மற்றும் பிரகாசமான எம் அனைவருக்குமான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இன்று இங்கு வருகை தந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் இந்த மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நீங்கள் இயலுமான அனைத்து உதவிகளையும் வழங்குவீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

நமது நாட்டிற்கும் நமது வருங்காலச் சந்ததியினருக்கும் ஒரு சிறந்த நாளைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோமாக.

 

உங்கள் அனைவருக்கும் நன்றி.

உபயம் - www.pmdnews.lk