போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குதே எமது இலக்கு - பாதுகாப்புச் செயலாளர்

டிசம்பர் 15, 2021
  • போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிக்கும் மையம் மீள திறந்து வைப்பு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேரிக்கை விடுத்தார்.

பத்தரமுல்ல, தலங்கமவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிக்கும் மையங்களில் ஒன்றான புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 'செத் செவன' நிலையத்தை நேற்றையதினம் (டிசம்பர்,14) மீள திறந்து வைத்த பின்னர் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் செயல்படும் இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடமானது, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிக்கும் மையங்களின் செயல்திறனை விரிவாக்கம் செய்வதற்கு உறுதுணையாக அமையவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிகாரியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளரை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வைத்திய நிபுணர் பிரியங்கி அமரபந்து வரவேற்றார்.

போதைப்பொருளுக்கு அடிமையான 25 நபர்களுக்கு சிகிச்சையளிக்கும்வகையில் முதலில் அமைக்கப்பட்ட இந்த நிலையம், தற்போது 75 நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டதாக இலங்கை கடற்படையின் ஆளணி மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக "போதைப்பொருள் இல்லாத நாடு" எனும் இலக்கினை அடைய சிகிச்சை நிலையங்களை விஸ்தரிக்கும் அதேவேளை, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் எனும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் முற்போக்கான வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் மற்றும் தங்கியிருந்து சிகச்சை பெறுவோர்களை கண்ணியமான குடிமக்களாக உருவாக்கும் சிகிச்சைகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததுடன் இதற்காக வைத்திய நிபுணர் அமரபந்து மற்றும் பணிப்பாளர் கனிஷ்க டி சில்வா உட்பட அனைவரும் மேற்கொண்ட அயராத முயற்சியையும் பாராட்டினார்.

 இதேவேளை, புனரமைப்புப் பணிகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய கடற்படை வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி (ஒய்வு), பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) ஜயந்த எதிரிசிங்க, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர(ஓய்வு), இலங்கை மன்ற தலைவர் சம்பிக்க அமரசேகர, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றவியல் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, விஷேட அதிரடிப்படை கட்டளைத்தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜெயசுந்தர, நன்கொடையாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை ஊழியர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.