சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென 'எல்லை அபாய மதிப்பீட்டு மத்திய நிலையம்' அங்குரார்ப்பணம்

டிசம்பர் 22, 2021

ஸாதிக் ஷிஹான்

நாடொன்றின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின்பாதுகாப்பு, பொருளாதாரஸ்திரத்தன்மை, உட்கட்டமைப்புவளர்ச்சி, சமாதானம் மற்றும்அமைதியான சூழல் போன்றவையிலேயே தங்கியுள்ளன. இவற்றைசீராகப் பேணும் நடவடிக்கையில்உலகில் எல்லா நாடுகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக சட்டவிரோத நடவடிக்கைகள், ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத அச்சுறுத்தல்கள், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடுருவல் போன்ற விடயங்களில் இருந்து நாட்டை பாதுகாக்க பாரிய நிதியை ஒதுக்கியும், திட்டங்களைத் தீட்டியும் அவற்றுக்கான விஷேட வேலைத் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

இவற்றில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை, இடம்பெயர்வு போன்ற விடயங்களில் இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் கடந்த காலங்கள் போன்று இன்றும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இவ்வாறு தொடர்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இரு நாட்டு அரசாங்கங்களும் பாதுகாப்பு தரப்பினர்களும் இணைந்து அவ்வப்போது பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் வருவது வழக்கமானதே.

அந்த வகையில் பிராந்திய எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மிக நீண்டகால தேவையாக கருதப்பட்டு வந்த எல்லை அபாய மதிப்பீட்டு மத்திய நிலையம் Border Risk Assessment Centre (BRAC) ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முதற்கட்ட உதவியாக 5மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து பத்தரமுல்லை, சுஹூருபாயவிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் அமைக்கப்பட்ட எல்லை அபாய மதிப்பீட்டு மத்திய நிலையம் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் மற்றும் இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்த மத்திய நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

மேற்படி நிலையத்திற்கு வருகை தந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்களை பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரான ஜெனரல் கமல் குணரட்ண வரவேற்றதுடன், மேற்படி நிலையத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தொடர்பாக எல்லை அபாய மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித் எல்விடிகல மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இடம்பெயர்வு முகாமைத்துவத் தலைவர் சாந்த குலசேகர ஆகியோர் விளக்கமளித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நிறுவப்பட்டுள்ள இந்த மத்திய நிலையம் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு புதிய நிறுவனமாகும். சட்டவிரோதமான செயற்பாடுகளைக் கண்டறிந்து அதற்குப் பதிலளித்தல், சட்டபூர்வமான பயணம் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குமுகமாக இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்கிடையே வளங்கள், ஒன்றிணைக்கப்பட்ட புலனாய்வு தகவல்கள் மற்றும் நிகழ் நேரத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தலமாக அமையும்.

இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், பயங்கரவாத தடுப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவு, பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவு உள்ளடங்கலாக நாட்டின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மத்திய நிலையம், வாரத்தில் ஏழு நாட்களும், 24மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தபடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைசார் நிறுவனங்களுடன் புலனாய்வு தகவல்கள் மற்றும் தரவுகளை பரிமாறிக் கொள்ளவுள்ளது.

படகுகள் மூலம் செல்லல், சட்ட விரோத ஆட்கடத்தலை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான முழுமையான செயற்பாடுகளை உடனுக்குடன் முன்னெடுப்பதே இந்த மத்திய நிலையத்தின் பிரதான செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையானது எல்லை பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் உதவி ஆணையாளர் நைஜல் ரியான் மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் சர்வதேச பிரிவின் முதலாவது உதவிச் செயலாளர் அடம் மேயர், இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜெவெல், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) ஜகத் அல்விஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி, தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ருவான் குலதுங்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஸ்சந்திர, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான தலைவர் (ஐ.ஓ.எம்) சரத் டாஷ், எல்லை அபாய மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித் எல்விடிகல, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் சத்துர டி சில்வா, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இடம்பெயர்வு முகாமைத்துவத் தலைவர் சாந்த குலசேகர மற்றும் தேசிய நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தரிந்து ஜெயவர்தன ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - www.thinakaran.lk