புத்தளம் மாவட்டத்தில் இரண்டு இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் வேலைத் திட்டம்

டிசம்பர் 22, 2021

கடற்படையினரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் முதல் அரிப்பு வரையான களப்பு பிரதேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் விசேட வேலைத் திட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் புத்தளம் கங்கேவாடி பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, புத்தளம் கடல் ஏரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்கு துறையும் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கங்கேவாடி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (18) காலை 9.00 மணியளவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவினால் மேற்படி கண்டல் தாவரங்கள் நடும் வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு வேலைத் திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த கண்டல் தாவரங்கள் நடும் வேலைத் திட்டமும், இறங்குதுறை நிர்மாணிக்கும் பணியும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன.

சிலாபம், புத்தளம், கல்பிட்டி களப்பு, டச்சு கால்வாய், கலா ஓயா, மல்வத்து ஓயா மற்றும் மோதரகம் ஆற்றுக் கரை அரிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள கண்டல் தாவரங்களின் அளவினை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 இடங்களில்இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை புத்தளத்தில் கடற்படையினரால் சுமார் 2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்கு துறையும் நேற்றுமுன்தினம் 11.00 மணியளவில் கடற்படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகர மண்டபத்திற்கு எதிரில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 93 அடி நீளமான இந்த இறங்கு துறையின் நிர்மாணப் பணிகள் கடற்படையினரால் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு நேற்றுமுன்தினம் அதாவது 40 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுலாத்துறையினை ஊக்குவித்தல் மற்றும் கடலில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்றொழிலாளர்களுக்குத் துரிதமாக உதவிகளை வழங்குவதற்கும் இந்த புதிய இறங்கு துறையின் மூலம் முடியுமாக இருக்கும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமேல் மாகாண பிரதம செயலாளர் பீ.பீ. எம். சிரிசேன, புத்தளம் மாவட்டச் செயலாளர் ஆர். ஜீ. விஜேசிரி, புத்தளம் நகர சபைத் தலைவர் எம். எஸ். எம். றபீக், வடமேல் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர். எம். எம். பெரேரா, புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள், கடற்படையினர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றி - www.thinakaran.lk