ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ் அரசாங்கத்தினால்
கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை
டிசம்பர் 25, 2021
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவை நிறுவி, ஆட்கடத்தல் வழக்குகளை விசாரித்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை இந்தப் பிரிவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் தேசிய புலனாய்வு பிரதானியின் தலைமையில், சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு, தொழில் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பல அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய செயலணி நியமிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம், மசாஜ் செநிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சோதனையிட்ட வலானையில் உள்ள மோசடி தடுப்புப்பிரிவு ஐந்து இந்தோனேசியப் பெண்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. குறித்த பெண்கள் ஆட்கடத்தலுக்கு ஆளாக நேரிடும் சாத்தியம் குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆட்கடத்தல் பிரிவுக்கு உரிய விசாரணையை மாற்றுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்க செயலணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேற்படி பிரிவு துரித நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள், (23 டிசம்பர் 2021) பிரதான குற்றவாளியான ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த விடயம் தொடர்பில் வழக்கினை தொடர்வதற்காக விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும், குறித்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணையைத் தொடர்ந்து பல ஆதாரங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அதனை துரிதப்படுத்த ஆட்கடத்தல் விவகாரம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவுக்கு உத்தரவிடுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோருவதற்கு 2021 டிசம்பர் 16ம் திகதி குறித்த செயலணியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை திருத்துவதற்கும், 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தை மேலும் திருத்துவதற்கும், உள்ளுர் சட்ட விதிகளுக்கு இணங்க உள்ளூர் சட்ட விதிகளை கொண்டு வருவதற்கும், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிற்கமைவாக ஆட்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கடத்தலைத் தடுத்தல், ஒழித்தல் மற்றும் தண்டித்தல் விதிமுறைலுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் ஆட்கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பல செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க இந்த செயலணி உத்தேசித்துள்ளதுடன், மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஆட்கடத்தல் சம்பவங்கள் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது.