நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 25, 2021

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.

சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து  போதித்த உன்னதப் பெறுமானங்களாகும். சமாதானம், கருணை, இரக்கம் போன்ற வழிகாட்டல்களின்  மூலம் தவறான புரிதலை நீக்கப்பெற்ற சுபீட்சமான வாழ்க்கை நெறிக்கு இந்தப் போதனைகள் வழிகாட்டுகின்றன. மானிட சமூகம், ஒவ்வொருவர் மீதும் இரக்க குணத்துடனும் அன்புடனும் வாழ்தல் மற்றும் சமுதாயத்தில் அல்லலுரும் மக்களுக்கு ஆதரவளித்தல் மூலம் இறைவனின் அன்பை உண்மையாகவே ஒவ்வொருவரினதும்  வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியும் என்பதை இயேசு கிறிஸ்து போதித்தார்.

சமூக ரீதியாக நத்தாருடன் ஒன்றிணைந்த கலாசாரம், ஒரு மகிழ்ச்சியான தருணமாகவும், நட்புணர்வின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது. அதனால், நத்தார் கலாசார விழுமியங்கள், இன, மத பேதமின்றியும் வயது வேறுபாடின்றியும் அனைவரது உள்ளங்களையும் உற்சாகமூட்டுகின்றன.

நிலவுகின்ற உலகளாவிய கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக இவ்வருட நத்தார் பண்டிகையை, சுகாதாரப் பரிந்துரைகளுக்கு ஏற்ப கொண்டாடவேண்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு வருட காலமாக, தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு நாடு என்ற வகையில் ஒவ்வொருவரினதும் மதங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆன்மீகச் சிந்தனைகள் மற்றும் ஒழுக்கம் என்பன தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்தன.

இவ்வருட நத்தார் பண்டிகையின் போதான இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தி, இலங்கைவாழ் கிறிஸ்தவ சகோதரர்களான உங்களுக்கும் உலகளாவிய கிறிஸ்வத மக்களுக்கும் கிடைக்கட்டும். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துகள்.

 

நன்றி - www.president.gov.lk