ருவாண்டா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

டிசம்பர் 27, 2021

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்களில் தகுதிவாய்ந்த ருவண்டா மாணவர்களை அனுமதிக்ககோரும் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ருவாண்டா குடியரசு புதுப்பித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ருவாண்டா மாணவர்களை அனுமதிக்கக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2015ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இணைந்த ஆய்வு என்பவற்றில் கவனம் செலுத்தி ருவண்டா பல்கலைக்கழகங்களுடன் எதிர்கால ஒத்துழைப்பினை மேம்பாட்டுத்த ஒரு உந்துசக்தியாக அமையவுள்ளதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் மேதகு ஜாக்குலின் முகாங்கிரா மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தி உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த ருவண்டா உயர்ஸ்தானிகர், ருவண்டா விமானப்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது பணியாற்றும் விமான பொறியியல் மற்றும் விமான பராமரிப்பு பொறியியல் துறைகளில் தொழில் வல்லுநர்களை அபிவிருத்தி செய்ததற்காக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும், பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கமான மற்றும் நட்புரீதியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் ருவாண்டா குடியரசின் சார்பில் இலங்கையில் உள்ள ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதம ஆலோசகர் மேதகு ஜேசிஇ அலேஸ், இரண்டாவது ஆலோசகர் மேதகு இராகோஸ் ப்ராஸ்பர் ஆகியோர் பங்குபற்றிய அதேவேளை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சார்பாக பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்), பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடத்தின் பீடாதிபதி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி, நிர்வாக உத்தியோகத்தர், சர்வதேச உறவுகள் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பதிவாளர் ஆகியோர் பங்கேற்றதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.