இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

டிசம்பர் 29, 2021

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு விமானப்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 10வது தடவையாக இடம்பெறுகின்றது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்காக விமானப்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மையமாகக் கொண்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை சார்பில் தெற்கு விமானப்படை தளபதியும் கட்டுநாயக்க விமானப்படையின் தளத்தின் கட்டளைத்தளபதியுமான எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் 19 விமானப்படை அதிகாரிகள் பங்குபற்றினர். மேலும் இந்திய விமானப்படை சார்பில் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.கே.ஒபெரோய் தலைமையிலான விமானப்படை அதிகாரிகள் பங்குபற்றினர்.

விமானப்படை பதவிநிலை அதிகாரிகளின் கலந்துரையாடலின் முடிவில், இந்திய விமானப்படையின் தூதுக்குழுவினர் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.