புதுப்பொலிவுடன்மீண்டும் காட்சியளிக்கவுள்ள லாஹுகல ‘நீலகிரி தூபி’
ஜனவரி 16, 2022• ‘நீலகிரி மகா தூபி’யின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நீலகிரி மகா தூபி’யின் புனரமைப்புப் பணிகளை இன்று (ஜனவரி, 16) பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி’யின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
லாஹுகல மகுல் மகா விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. இந்திகஸ்வெல்ல புஞ்ஞசார தேரர் மற்றும் பானம, போதி ருக்காராம விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண.பானம சந்திரரதன நாயக்க தேரர் ஆகியோரின் பௌத்த சமய ஆசிகளுடன், நீலகிரி மகா தூபியின் புனரமைப்புச் பணிகளைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் முதல் கல் வைக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், :-
“இது ஒரு புனிதமான சமயத் தளமாகும், இங்கு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது நீலகிரி நினைவுச்சின்னங்கள் என்று அழைக்கப்படும் புனித நினைவுச்சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன”, இவைகள், இந்த தூபியை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது என்றார்.
இந்த நடவடிக்கையின் போது அனைத்து நீலகிரி நினைவுச்சின்னங்களும் தூபியில் வைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த புண்ணிய கருமத்திற்கான நிதி தொடர்பாக கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், இதற்காக எந்த ஒரு அரச நிதியும் பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்படவுள்ளதாகவும் இதற்காக அமைச்சரவை ஒப்புதலின் பின்னர் "நீலகிரி அறக்கட்டளை நிதியம்" உருவாக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, இலங்கை விமானப்படை லாஹுகல வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மகா தூபியின் மீள்கட்டுமானப் பணியினை பொறுப்பேற்றுக் கொண்டது.
நீலகிரி மகா தூபியின் வரலாற்று சிறப்புமிக்க கீர்த்தியை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய லாஹுகல மகுல் மகா விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. இந்திகஸ்வெல்ல புஞ்ஞசார தேரர் தலைமையில் இந்த தூபியின் மீள்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீலகிரி மகா தூபி, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மிகப்பெரிய பௌத்த தூபியாகக் கருதப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பௌத்த மதத் தளம், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதிகளின் பிடியின் கீழ் காணப்பட்டமையினால் எதுவித பராமரிப்பு பணிகளுக்கும் உட்படமால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
லாஹுகல வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த புனித மதத் தளத்தின் வரலாறு கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும், இந்த தளம் நினைவுச்சின்னங்கள், சிறிய ஸ்தூபியின் எச்சங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது என வரலாற்று குறிப்புக்கள் தெரிவிக்கின்றது.
விமானப்படையினால் மீள்கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கப்பட்டது.
மேலும், இந்த விஜயத்தின் போது முஹுது மகா விகாரைக்கு சென்று பாதுகாப்பு செயலாளர் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் நா உயன மடத்தின் பிரதம விஹாதிதிபதி வண. அங்குல்கமுவே ஆரியநந்த தேரர், கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. பொரலந்தே வஜிரஞான தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீஎம்எல் பண்டாரநாயக்க, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே, ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள், பிராந்தியத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.