--> -->

அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட தீகவாப்பி தூபியின் புனித சின்னங்கள் மீண்டும் தூபியின் உள்ளக அறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது

ஜனவரி 17, 2022

• சமய கிரிகைகளுக்கு மத்தியில் புனிதஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
 
தீகவாப்பி தூபி தளத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட புனித சின்னங்களை மீண்டும் தூபியின் உள்ளக அறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இன்று (ஜனவரி. 17) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து தீகவாப்பி விஹாரை வளாகம் வரை ஊர்வலமாக வந்தடைந்த புனித வஸ்துக்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன கலந்து சிறப்பித்தார்.

இதற்கமைய, புனித வஸ்துக்களை பிரதிஷ்டை செய்வதற்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட “புனித அறையில் ” துருது போயா தினமான இன்று புனித வஸ்துக்கள் வைக்கப்பட்ட இதேவேளை, பயாகல மலேகொட ஸ்ரீ புஷ்பாராம விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. மலேகொட நந்த தேரரின் சமய கிரிகைகளுக்கு மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளினால் பௌத்த புனிதஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
 
நா உயன மடத்தின் பிரதம மடாதிபதி வண. அங்குல்கமுவே ஆரியரநந்த தேரர் மற்றும் அம்பாறை மகாவாபி விகாரையின் பிரதம விஹாராதிபதி வண. கிரிந்திவெல சோமரதன தேரர் ஆகியோர் அனுஷாசனத்திற்கு தலைமை தாங்கினர்.

 புராதன தீகவாப்பி புனிதஸ்தலம் பாழடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பாக இவ்விஹாரையின் பிரதம விஹாராதிபதி மஹாஓய சோபித தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்தது ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் அதன் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் அதிக முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பௌத்த சமய பக்தர்களினால் ‘தீகவாபிய அருண அறக்கட்டளை நிதியத்திற்கு’ வழங்கப்படும் நன்கொடைகள் மூலம் இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியளிக்கப்படுகிறது.

பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில், புத்தபெருமான் பார்வையிட்ட இடமான தீகவாப்பி, புனிதமான புராதன மதஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த புனித ஸ்தலத்தில் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கு வழங்கப்பட்ட அன்னதானம் நிகழ்வினை அடுத்து இன்றைய நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தீகவாப்பி விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. மகாஓய சோபித தேரர், ஸ்ரீ சம்போதி விகாரையின் பிரதம விஹாராதிபதியும் பௌத்தயா தொலைக்காட்சி அலைவரிசையின் தலைவருமான வண. பொரளந்தே வஜி ஞான தேரர், அம்பாறை மகாவாபி விகாரையின் பிரதம விஹாராதிபதியும் அம்பாறை மாவட்ட சங்க சபை பதிவாளருமான வண. கிரிந்திவெல சோமரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்.

 புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, விவசாய அமைச்சின் செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருமான டி.எம்.எல். பண்டாரநாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பிராந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.