நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வழங்கும் 'ஜய பிரித்' நிகழ்வு ஜனவரி 26ம் திகதி நடைபெறும்

ஜனவரி 18, 2022

பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'ஜய பிரித்' பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இம்முறை ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

'ஜய பிரித்' ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :-

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டியும், தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் நோக்கிலும், மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் இருந்து அழைக்கப்பட்ட 1000 பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இந்த ஆண்டுக்கான 'ஜயபிரித்' நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஜெனரல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.

முப்படையினருக்கும் ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொடுக்கும் இந்த நிகழ்வில் அங்கவீனமுற்ற போர்வீரர்கள் மற்றும் உயிரிழந்த போர் வீரர்ககளது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொள்ள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்கள் காரணமாக இந்த ஆண்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வளாகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜயபிரித்’ நிகழ்வு சுமார் 3000 முதல் 5000 பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் - 19 தொற்றுநோய் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நடைபெற்ற 'ஜெய பிரித்' நிகழ்வில் வணக்கத்துக்குறிய மகா சங்க உறுப்பினர்களால் ரத்தின சூத்திரம், கினிபிரித் மற்றும் ஜெயபிரித் என்பன பாராயணம் செய்யப்பட்டது.

நாள் முழுதுமான பிரித் பாராயணம் மற்றும் அன்னதானம் வழங்கும் இந்த மாபெரும் புனித நிகழ்விற்கு ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரி அலுவலகம், பௌத்த விவகார ஆணையாளர் நாயகம், முப்படைகள், இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பனவற்றின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) காமினி மஹகமகே, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி, இராணுவத்தின் அட்ஜூட்டன் ஜெனரல் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத், முப்படை, பொலிஸ் மற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.