கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குற்றவியல் நீதி பீடத்தை நிறுவுகிறது

ஜனவரி 19, 2022

• கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குற்றவியல் நீதி பீடம் பாதுகாப்பு செயலாளரினால் அங்குரார்ப்பனம்

• இதுபோன்ற துறை சார் பீடம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி பீடத்தை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜனவரி 19) வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

அத்துடன் பல்கலைக்கழகத்திற்கான அச்சகமும் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்ட பீடமானது நாட்டின் உயர்கல்வித்துறை யில் முன்னணி நிறுவனமாக பரிணமித்து வரும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது பீடமாகும்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன :-

2020 ஒக்டோபர் 19 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்புச் சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ்வாறான பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான தேவை தொடர்பான யோசனையை முதலில் முன்வைத்தார். அத்துடன் அதிகாரிகளை உள்ளடக்கிய தொழில்முறை பொலிஸ் படையொன்றை உருவாக்குவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். இதற்கு அவசியமாக கல்வி சூழலை உருவாக்கும் பொறுப்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது என்றும் 2021 மே மாதம் 21ஆம் திகதி அன்று குற்றவியல் நீதிக்கான முன்மொழியப்பட்ட பீடத்தை நிறுவுவதற்கு பல்கலைக்கழக முகாமைத்துவ சபை ஒப்புதல் அளித்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து வெளியேறும் கணிசமான மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இத்துறையில் உயர்கல்வி பெற விரும்புவதால், புதிய பீடம் சரியான நேரத்தில் தேவையை பூர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 அத்துடன் குற்றவியல் நீதி அமைப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் முன்னெடுத்த இந்த நடவடிக்கையின் பலனாக, குற்றவியல் நீதித்துறையில் நன்கு நிபுனத்துவம் மிக்க அதிகாரிகளை நமது தாய்நாட்டிற்கு வழங்குவதன் மூலம் சட்ட அமலாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது பாதுகாப்பு செயலாளர் புதிய பீடத்தின் இணையத்தளத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நாட்டிற்காக தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன்பல்கலைக்கழக பீடத்தின் அங்குரார்ப்பண வைபவம் ஆரம்பமானது.

 இதன் போது குற்றவியல் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜீவா நிரியெல்ல வரவேற்புரையாற்றினார்.

இந்த வைபவத்தின் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கே.ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.