கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாம் நிறைவு

ஜனவரி 21, 2022

வெலிசறையில் உள்ள கடற்படையின் லங்கா அணிவகுப்பு மைதானத்தில் வியாழக்கிழமையன்று (ஜனவரி, 20) இடம்பெற்ற கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமினை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.
 
கடற்படை தொண்டர் படையின் ஆயத்த நிலை மற்றும் தொழில்முறைத் திறனைக் கண்டறிய உதவும் வகையில் நடத்தப்படும் கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாம் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமானது.

நேற்று நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் கடற்படைத் தளபதி படைப் பிரிவுகளை ஆய்வு செய்ததுடன் , சம்பிரதாய பூர்வமான மரியாதை அணிவகுப்பினையும் ஏற்றுக்கொண்டதாகவும் வண்ணமயமான கலாசார காட்சியைக் கண்டு களித்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற்ற இந்த இறுதி நிகழ்வில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் வைய்என் ஜயரத்ன, பிரதிப் பிரதம அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, கடற்படை தொண்டர் படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, கடற்படை தொண்டர் படையின் கட்டளை அதிகாரி உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடற்படை தொண்டர் படையானது, நாட்டில் அவசர நிலைமைகள் மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது நிபுணத்துவம் மற்றும் மனிதவள வடிவில் தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ள கடற்படை பயிற்சியுடன் கூடிய சிவில் துறையில் பங்கெடுக்கும் கடற்படையின் பிரதான பிரிவாகும்.

Tamil